மெக்சிகோவில் அடுத்தடுத்து விபத்து.

16.05.2025 07:28:56

மெக்சிகோவின் பியூப்லா மாநிலத்தில் நேற்று (மே 14) நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் குறைந்தது 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு லொறி, முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நிலை தடுமாறிய லாரி, எதிரே அதிவேகமாக வந்து கொண்டிருந்த ஒரு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தின் தாக்கத்தால், அடுத்தடுத்து மேலும் இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி பள்ளத்தில் கவிழ்ந்தன.

விபத்துக்குள்ளான பேருந்து கவிழ்ந்த உடனேயே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் உடல் கருகி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும், அதற்குள் பேருந்தில் இருந்த 21 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர் விபத்து காரணமாக குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

விபத்து குறித்து உள்ளூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், லொறி ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த துயர சம்பவம் மெக்சிகோ முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.