2027 ஆம் ஆண்டு முதல் 6 மற்றும் 2 ஆம் தரங்களுக்கு புதிய பாடத்திட்டங்கள்!

19.10.2026 15:39:12

2027 ஆம் ஆண்டு முதல் 6 மற்றும் 2 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.புதிய கல்வி மறுசீரமைப்பு கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

பதுளை நகரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நவீன உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். முதலாம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு 2 ஆம் மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை அமுல்படுத்தப்படும்.

அனைத்துப் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தினால் புதிய கல்வி முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு மாத்திரம் முகங்கொடுக்கும் ஒரு பிள்ளைக்குப் பதிலாக,எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய ஒரு பரம்பரையை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை, 17,000 பேரை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நவம்பர் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.அதேபோல் பல்கலைக்கழக அமைப்பிற்கு 2,000 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதமளவில் முழுமையான கல்வி முறைமைக்கு புதிதாக சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.