தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு

31.03.2021 12:54:14

 

தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து ஏனைய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கவும் தமிழக் அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலைத் தடுக்க, 2020ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி முதல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறையவடைந்ததைத் தொடர்ந்து, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன் பின்னர் புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.

தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.