அந்நியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் அளவுகோல் அல்ல!
|
ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிடுவதற்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பு மட்டுமே ஒரே அளவுகோல் அல்ல என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்தா தெரிவித்துள்ளார். |
|
பாராளுமன்றத்தில் நிதிச் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அந்நியச் செலாவணிக் கையிருப்பு பொருளாதாரத்துக்கான பாதுகாப்பு அரண் மாத்திரமே எனவும், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப அது மாறுபடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சுமார் 2.6 பில்லியன் டொலர் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து சுமார் 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்திருந்தால் நாட்டின் கையிருப்பு மேலும் 3.5 பில்லியன் டொலர் அதிகமாக இருந்திருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, கையிருப்பின் அளவை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிட முடியாது என அவர் மேலும் வலியுறுத்தினார். |