வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்!

19.05.2026 08:24:25

பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் மாத்திரம் போதாது. மாறாக சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

   

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் உள்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் அவர்களது அன்புக்குரியவர்களால் நினைவுகூரப்பட்டனர்.

அதற்கமைய போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதமோதல் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அம்மோதலில் உயிர் பிழைத்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடி போரின்போதும், இறுதிக்கட்டப்போரிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், தாம் அனுபவித்த துயரங்களுக்கு சாட்சியாக நிற்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக ஆவணப்படுத்தப்பட்டதன் பிரகாரம், மோதலின்போது இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் உடனடித் தேவையை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது.

உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாகப் பக்கச்சார்பற்றதும், நம்பகரமானதுமான விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிசெய்வதாக இலங்கை உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பலமுறை வாக்குறுதியளித்த போதிலும், தற்போதைய அரசாங்கம் உள்ளடங்கலாக அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் அவ்வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டன.

நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கானது நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புக்களை சீர்குலைப்பதுடன் மாத்திரமன்றி, சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட வலுவான நடவடிக்கை அவசியம் என்பதையும் காண்பிக்கின்றது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ்ச்சமூகங்களுடனான கலந்துரையாடலின்போது, நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்பன நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்துடன் அர்த்தமுள்ள ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பமுடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.