டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

13.08.2025 07:37:38

போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.

மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைகளை வைக்க முடியும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதிகளைக் கொண்ட டான்பாஸ், 2014 முதல் ரஷ்யாவால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோ இப்போது கிட்டத்தட்ட லுஹான்ஸ்க் முழுவதையும், டொனெட்ஸ்கின் சுமார் 70% பகுதியையும் கொண்டுள்ளது.

ஆனால் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, டான்பாஸை விட்டு வெளியேறும் எந்தவொரு திட்டத்தையும் உக்ரேன் நிராகரிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், ரஷ்ய படைகள் தங்கள் கோடைகால தாக்குதலைத் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன.

கிழக்கு நகரமான டோப்ரோபிலியா அருகே திடீரென முன்னேறி, குறுகிய நேரத்தில் 10 கி.மீ (ஆறு மைல்கள்) தூரம் அவை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது.