கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றி
கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்நிலைமை உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2022 ஏப்ரல் 12 ஆம் திகதி, குறிப்பிட்ட அளவு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்த இலங்கை முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில், கடனை மறுசீரமைக்குமாறு எமக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்காக லாசார்ட் நிறுவனத்தை எமது பிரதிநிதியாகவும், சட்ட விடயங்களுக்காக கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனமும் நியமிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இதுவரை இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடனை திருப்பிச் செலுத்தும் நிலைபேறான நாடாக மாறியுள்ளதுடன், இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் எனவும் நமது நாட்டுக்கு மேலும் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முழுமையான கடன் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவதுடன், மொத்தக் கடன் தொகையை மொத்த தேசிய உற்பத்தியில் 95 வீதம் வரை குறைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டுக் கடனுக்கான தற்போதைய வட்டியை மொத்த தேசிய உற்பத்தியில் 4.5 வீதம் வரை குறைக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.