இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மூன்று நாட்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது !

08.08.2022 10:11:56

மூன்று நாட்களாக நீடித்த மோதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை இரவு காலக்கெடுவுக்கு முன்னும் பின்னும் சில நிமிடங்களில் இரு தரப்பிலிருந்தும் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு 11 நாள் மோதலுக்குப் பின்னர் இடம்பெற்ற மிகக் கடுமையான மோதல் இது என்றும் இதில் குறைந்தது 44 பேர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போர்நிறுத்தத்தை பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காசாவிற்கு எரிபொருள் மற்றும் மனிதாபிமான பொருட்களை வழங்கவும் உத்தரவிட்டார்.

மேலும் பொதுமக்களின் உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகள் சரியான நேரத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் இடைத்தரகராக நின்று மத்தியஸ்தம் செய்த எகிப்தால் போர்நிறுத்தம் ஒப்பந்தம் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.