ஹெஸ்பொல்லா அதிகாரி மரணம்!

02.04.2025 07:45:58

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு ஹெஸ்பொல்லா அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இது இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்தை மேலும் சோதிக்கிறது.

உயிரிழந்த அதிகாரி ஹசன் பிடெய்ர் என்றும், அவர் ஹெஸ்பொல்லா பிரிவு மற்றும் ஈரானின் குட்ஸ் படையின் உறுப்பினர் என்றும், அவர் “இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி பயங்கரவாத தாக்குதலை” திட்டமிடுவதில் பாலஸ்தீனிய குழு ஹமாஸுக்கு உதவியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

பிடெய்ர் தனது மகனுடன் சேர்ந்து கொல்லப்பட்டதை ஹெஸ்பொல்லா உறுதிபடுத்தியுள்ளது.

லெபனான் பாதுகாப்பு வட்டாரம், பிடெய்ர் ஒரு நடுத்தர தரவரிசை தளபதி என்றும், பாலஸ்தீனக் கோப்புகளை கையாள்வதும் அவரது பொறுப்புகளில் அடங்கும் என்று கூறியுள்ளது.

ஹெஸ்பொல்லா கட்டுப்பாட்டில் உள்ள புறநகர்ப் பகுதியான பெய்ரூட்டில் ஐந்து நாட்களில் இஸ்ரேல் நடத்திய இரண்டாவது வான்வழித் தாக்குதலாக இது அமைந்தது.

இது கடந்த ஆண்டு பேரழிவு தரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்காவின் மத்தியஸ்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீதான தாக்குதல்கள், இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளதுடன், செங்கடல் கப்பல் போக்குவரத்தைத் தாக்குவதை நிறுத்துமாறு ஈரானுடன் இணைந்த ஏமனின் ஹவுத்திகளை அமெரிக்கா தாக்கியுள்ளது.