நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரங்களுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை தொடர்ந்து, 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம், 2024'-ல் அதிரடியான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரிக்க துரித நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதுடன், குற்றவாளிகளுக்கு 3 மாதங்களுக்குள் தீர்ப்பும் தண்டனையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வினாத்தாள் கசிவு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
தற்போதுள்ள விதிகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய இந்த சட்டம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், முறைகேடுகளை முழுமையாக ஒழிக்கவும் மத்திய அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்குத் தீவிர வரவேற்பு கிடைத்துள்ளது.