தவெக அரசுக்கு பாஜக கண்டனம்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் என்பது முற்றிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பர உத்தி மட்டுமே என பாஜக மாநிலத் தலைமைச்செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுவிட்டு, அதனை வரலாற்று சிறப்புமிக்க முதலீட்டு அறுவடை எனகூறி மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பயணத்தில் கையெழுத்தானவற்றில் மிகப்பெரிய ஒப்பந்தம் நொய்டாவை சேர்ந்த சவர்தனா மோத்சன் என்ற இந்திய நிறுவனத்துடன்தான் என்றும், வில்சன் பவர் நிறுவனம் ஏற்கனவே 2025-இல் ஒப்பந்தம் செய்து இந்த ஆண்டு ஆலையைத் திறந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிக்மா நிறுவனம் மற்றும் EY போன்ற நிறுவனங்களும் முன்பே வந்துவிட்ட நிலையில், இது புதிய முதலீடு அல்ல மாறாக வெளிநாட்டு பின்னணியில் நடக்கும் பழைய வணிகமே என்று அவர் விளக்கியுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் காகிதங்கள் மட்டுமே என்றும், சில்வர்ஸ்டோன் புகைப்படங்கள் அரசியல் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டவை என்றும் அவர் விமர்சித்துள்ளார். தரையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளே உண்மையான சோதனையாகும் என்றும், பொதுமக்களின் பணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றுப்பயணம் தேவையற்ற விளம்பர நாடகமாகவே முடிந்துள்ளது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.