இந்தியர்கள் கல்வியை விட திருமணத்திற்கே அதிகம் செலவிடுகின்றனர்

02.07.2024 08:10:31

இந்தியர்கள் அதிகபட்சமாக உணவு மற்றும் கல்வியை விட திருமணத்திற்காக அதிக அளவில் செலவு செய்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கு அடுத்தபடியாக, ஆண்டிற்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி செலவிடப்படுவது திருமணத்திற்கு தான் என்று நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு இந்தியர், கல்வியை விட திருமணத்திற்காக இரண்டு மடங்கு செலவு செய்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரிஸ் (Jefferies) என்பது பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம். இந்த நிறுவனம் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் இந்தியர்களின் திருமண செய்யும் செலவுகளை  பற்றி ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வின்படி, இந்தியத் திருமணத்திற்காக ரூ.10.7 லட்சம் கோடி செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு திருமணத்திற்கும் சராசரியாக ரூ.12.5 லட்சம்  வரையிலும் செலவு செய்யப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.4 லட்சமாக உள்ள நிலையில், வருமானத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக திருமணத்திற்குச் செலவு செய்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், தனிநபரின் ஆண்டு வருமானத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாக திருமணத்திற்காக செலவு செய்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் என்றாலே அதில் முக்கியப்பங்கு வகிப்பது ஆடைகள் மற்றும் நகைகள் தான். அவற்றின் செலவிற்காக சுமார் 30% பணம் செலவிடப்படுகிறது. உணவு மற்றும் அது சார்ந்தவைக்காக சுமார் 20% பணம் செலவு செய்யப்படுகிறது. போட்டோகிராஃபி, மேடை அலங்காரம் போன்ற இதர ஆடம்பர செலவுகளுக்காகவும் அதிக அளவில் பணம் செலவு செய்யப்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.