போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வால் தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்து வருகிறது- மு.க.ஸ்டாலின்

11.08.2023 10:08:00

போதைப் பொருள் புழக்கத்தால் ஏற்படுகின்ற தீமைகளை பற்றி இளம் தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க அதை கல்லூரி மாணவ-மாணவிகள் திரும்ப வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு-என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தால் ஏற்படுகின்ற தீமைகளை பற்றி இளம் தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதான் இந்தத் திட்டத்தினுடைய நோக்கங்கள். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் இத்தகைய குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. அதற்காக, முழுவதுமாக தடுத்துவிட்டோம் என்று சொல்ல வரவில்லை. குறைந்து கொண்டு வருகிறது என்று தான் நான் சொல்கிறேன். அதனால்தான், ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்கின்ற நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக இறங்கி இருக்கிறோம். கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து நான் பேசும்போது, 'போதைப் பொருள் விற்பனை சங்கிலியை உடைக்க வேண்டும்; பள்ளி, கல்லூரிகளின் அருகே போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொன்னேன். "இந்த நடவடிக்கையில் நான் சர்வாதிகாரி போல செயல்படுவேன்" என்று கொஞ்சம் கடுமையாகவே பேசியிருந்தேன். அந்த அடிப்படையில் தான் அரசும் நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக ஆகஸ்ட் 11, 2022 முதல், 154 குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து 18 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 அசையும் / அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓராண்டில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5,184 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. கஞ்சா சாகுபடி இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை தமிழ்நாடு இப்போது தொடர்ந்து பராமரித்து கொண்டு வருகிறது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா மற்றும் இந்தியாவோட வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தப்படுவதை கவனத்துல வைத்து, அதை தடுக்குற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். ஒரு சில மாநிலங்களில் இருப்பதுபோல மோசமான நிலைமை தமிழ்நாட்டில் இல்லை இன்று எல்லா கல்வி நிறுவனங்களிலும், மாபெரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு அலுவலர்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் என்று நம் எல்லோரும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாயகம் கவி எம்.எல்.ஏ., உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.