கிழக்கில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்

26.11.2021 07:27:12

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கனடா வாழ் இலங்கை முஸ்லீம் சமூகத்தினர் புதன்கிழமை (24) சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.

சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை கதைக்கின்றார். எங்களுக்காக பேசுகின்றார் என. எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.

அதிலே இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை பாராட்டுவதனை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது.

எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று. அது உண்மைதான். என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.