ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்!

17.09.2025 08:15:18

அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை(நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர்,

 

தேர்தல் விஞ்ஞாபனம்

"எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்ற உள்ளோம்.

அதில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும்.

2029ஆம் ஆண்டுக்கு முன் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும். ஜனாதிபதி அநுரவுக்கு பின்னர் ஜனாதிபதி யாரும் இருக்க மாட்டார்கள்.

நாங்கள் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்கள் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்துள்ளதா என நினைத்து பாருங்கள்.

இதை நேர்மறையாக நோக்குங்கள். ஒரு நாடு என்ற வகையில் சாதகமான விடயமாகும். நாங்கள் அரசியலுக்கு வரும் போது எவ்வளவு சொத்து இருந்தது. விட்டுச் செல்லும்போது எவ்வாறு என்று மக்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகள் வரும் போது இருந்த சொத்தின் மதிப்பும் பின்னரும் எவ்வாறு அதிகரித்தது என்பதில் எமக்கிடையில் ஒரு உரையாடல் மட்டுமே இருந்தது. நாங்கள் வெளிப்படை தன்மையுடன் செயற்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.