உலக நீச்சல் போட்டியில் பிரான்ஸ் வீரர் ‘தங்கம்.

01.08.2025 07:59:26

சிங்கப்பூரில் நடைபெற்ற  உலக நீச்சல் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 200 மீ.,  தனிநபர் ‘மெட்லே’ பிரிவின் இறுதிப் போட்டியில்  பிரான்சின் லியோன் மார்ச்சந்த் (Leon Marchand )முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

 

பாரிஸ் ஒலிம்பிக்கில் 4 தங்கம் கைப்பற்றிய இவர், அரையிறுதியில் உலக சாதனை (1 நிமிடம், 52.69 வினாடி) படைத்திருந்தார். இது, உலக சம்பியன்ஷிப் அரங்கில் மார்ச்சந்த் கைப்பற்றிய 6வது தங்கம்.

வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே அமெரிக்காவின் ஷைன் காசாஸ் (1:54.30), ஹங்கேரியின் ஹூபர்ட் கோஸ் (1:55.34) கைப்பற்றினர்.

இதேவேளை பெண்களுக்கான 200 மீ., ‘பட்டர்பிளை’ பிரிவு பைனலில் இலக்கை 2 நிமிடம், 01.99 வினாடியில் கடந்த கனடாவின் சம்மர் மெக்கின்டோஷ், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய ‘ஹாட்ரிக்’ தங்கம் ஆகும்.

 

ஏற்கனவே 200 மீ., ‘மெட்லே’, 400 மீ., ‘பிரீஸ்டைல்’ பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் இவர் வென்ற 7வது தங்கம்.

அடுத்த இரு இடங்களை கைப்பற்றிய அமெரிக்காவின் ரீகன் ஸ்மித் (2:04.99), அவுஸ்திரேலியாவின் எலிசபெத் டெக்கர்ஸ் (2:06.12) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.