ஜனநாயகம் இல்லாத தனிக்கட்சி ஆட்சியே நடக்கிறது!
|
இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நீதியை நிலைநாட்டும் நடைமுறை தொடர்பில் பிரேரணையொன்றை கொண்டு வந்தது. ஆனால், சபாநாயகர் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தன்னிச்சையாகச் செயற்பட்டு, இப்பிரேரணை மீதான விவாதத்தை நிராகரித்தார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
|
|
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டின் அரசியலமைப்பின் 107 மற்றும் 108 ஆவது உறுப்புரைகளின் பிரகாரம், உயர் நீதிமன்றங்களின் நீதியரசர்களை நியமிப்பதற்கான பதவிக்காலம் மற்றும் செயல்முறைகள் தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 63 வயதிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும் ஓய்வு பெற வேண்டும் என்று இருக்கும் நிலையில், அரசாங்கம் எந்தவொரு விஞ்ஞான பூர்வமான முறையுமின்றி இந்த ஓய்வு பெறும் வயதை நீடிக்க முயற்சிப்பது குறித்து தற்சமயம் சமூகத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்பன நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அரசாங்கம் ஏற்படுத்தவிருக்கும் இந்த மரண அடிக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பைத் திருத்தும்போது, தனிநபர் ஒருவரின் அல்லது ஒரு குழுவின் தேவைக்காக அதனைச் செய்வது மிகவும் ஆபத்தான, ஜனநாயக விரோத செயலாகும். பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துப்படி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு, தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பைத் திருத்துவதை நாங்கள் முற்றாக எதிர்க்கிறோம். அரசியலமைப்பில் மாற்றம் நிகழ்வது என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைந்து காணப்பட வேண்டும். ஆனால் இன்று அரசாங்கம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து, நீதித்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கவும், அதன் சுதந்திரத்திற்கு மரண அடி கொடுக்கவும் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த இழிவான முயற்சி அருவருக்கத்தக்கது. அனைத்து செயல்முறைகளும் சட்டத்தின் ஆட்சிக்கு இணங்கவும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் அமைய வேண்டும். இது கனம் நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் கடுமையான அழுத்தமாக காணப்படுகின்றன. தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகளும், உயர் நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகளும் வெற்றிடங்களாக காணப்படுகின்றன. இந்த நியமனங்களைச் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தபோதிலும், கடந்த 6 மாதங்களாக அவர் அதனைச் செய்யவில்லை. இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இருப்பது நீதிபதிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அழுத்தமாகவே காணப்படுகின்றன. அதேபோல் இதுவொரு 'மன ரீதியான இலஞ்சம்' (Mental Bribery) தானா என்ற சந்தேகமும் எழுகிறது. நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கூட ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது. ஏனைய நீதிமன்றங்களின் வெற்றிடங்களை நிரப்பும்போது seniority (சிரேஷ்டதன்மை) முறைகளை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது. நிறைவேற்றுத்துறையின் தலைவரான ஜனாதிபதியின் இந்த தன்னிச்சையான போக்கு சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் பலத்த அடியாகும். நீதித்துறையின் சுதந்திரம் குறித்துப் பேசிய அரசாங்கமே இன்று அதன் சுதந்திரத்தை அழித்து வருகின்றது. இது நீதித்துறையின் தொடர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும், மக்களின் இறையாண்மைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் விடுக்கப்படும் மரண அடியாகும். தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்த சமயம் ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பேசினார். ஆனால் இன்று இந்த நியமனங்களைச் செய்யாமலும், ஓய்வு பெறும் வயதை அதிகரித்தும் நீதித்துறைக்கு நேரடி அழுத்தங்களை பிரயோகிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். அரசியலமைப்பின் 4(ஈ) உறுப்புரையின்படி, மக்கள் இறையாண்மையை நிறைவேற்றுவதில் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மக்களின் அபிலாஷைகளின் மூலமே செயல்படுகின்றன. இந்த பாராளுமன்றத்தின் மூலம் அந்த மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற நீதித்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் உன்னதமான சட்டம் என்பதால் அரசாங்கம் இனைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகம் இல்லாத தனிக்கட்சி ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது. ஜனநாயகத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறிய அரசாங்கத்தின் அழகான உலகம் இன்று இல்லை. ஜனநாயகம் இல்லாத தனிக்கட்சி ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது. இது சர்வாதிகார முறையை வலுப்படுத்தும் ஒரு செயலாகும். நீதித்துறையின் நிலைபேறலுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நேரடியாகத் தலையிடுகிறது. பதவி உயர்வுகளைக் காட்டி, சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய தீர்ப்புகளுக்கு வெளியே இருந்து செல்வாக்கு செலுத்தவும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பது அரசியலமைப்புக்கு எதிரான செயலாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். |