கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

12.07.2024 08:08:00

 மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிபிஐ தரப்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அதிலும் ஜாமின் கிடைக்காமல் கெஜ்ரிவால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், பிறகு அவரை சி.பி.ஐ., அதிகாரிகளும் கைது செய்தனர். தற்போது அவர், சிபிஐ காவலில் உள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதற்கு டில்லி ஐகோர்ட் தடை விதித்தது.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு, ஜாமினில் வெளியில் இருப்பதற்கும் விசாரணையை நடத்துவதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனக்கூறியதுடன், 90 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளார் என்பதை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். சிபிஐ தரப்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அதிலும் ஜாமின் கிடைக்காமல் கெஜ்ரிவால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.