ராஜபக்சர்களின் அதிகார ஆசை
ராஜபக்சர்களின் அதிகார ஆசை
ராஜபக்சர்களின் அதிகார ஆசை காரணமாக சமகால அரசாங்கத்தில் மீண்டும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள ராஜபக்சர்களின் அதிகார ஆசை காரணமாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க திட்டமிட்டு வருகின்றனர்.
பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில்
இந்நிலையில் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரணிலை பிரதமராக நியமிக்க ஆதரவு வழங்கிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ரணிலை வெளியேற்றுமாறு, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் பிரதமர் பதவியில் இருந்து வெளியேற ரணில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பதவியை துறக்க தயார் எனினும் பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க கோட்டாபய அனுமதிக்க வேண்டும் என ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் தான் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை நிறைவுறுத்தும் வகையில் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கினால், பிரதமர் பதவியில் இருந்தும் அவர் விலகுவார் என இதற்கு முன்னர் நம்பப்பட்டது. எனினும் தற்போது அதற்கு ரணில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் மிக அரிதான சந்தர்ப்பத்துடன் பிரதமராக பதவியேற்றதன் மூலமும், பூஜ்ஜியத்திற்குச் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்வதே ஒரே வழி என்பதனாலும் எக்காரணம் கொண்டும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதில்லை என்பதில் ரணில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.