வெளியானது உலக கோப்பை அட்டவணை

18.08.2021 14:32:07

உலக கோப்பை ‘டுவென்டி–20’ அட்டவணை வெளியானது. குரூப் ‘பி’ முதல் மோதலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

இந்தியாவில் நடக்க இருந்த 7வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமனுக்கு (அக். 17 – நவ. 14) மாற்றப்பட்டது. 16 அணிகள் ‘ரவுண்டு–1’, ‘சூப்பர்–12’ என, இரண்டு சுற்றுகளாக விளையாடுகின்றன.

தரவரிசை (2021, மார்ச் 20) அடிப்படையில் இந்தியா, விண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து என, 8 அணிகள் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றன. இதில் இந்திய அணி, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ‘குரூப்–2’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதனிடையே, நேற்று உலக கோப்பை இறுதி அட்டவணை வெளியானது. அக்., 23ல் பிரதான சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் ஆஸ்திரேலியா–தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து–விண்டீஸ் மோதுகின்றன.

அக்., 24ல் துவங்கும் ‘சூப்பர்–12’ சுற்று குரூப் ‘பி’ போட்டி இந்தியா, பாகிஸ்தான் மோதலுடன் துவங்குகிறது. இப்போட்டி துபாயில் நடக்கவுள்ளது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து (அக்., 31), ஆப்கானிஸ்தானை (நவ. 3) எதிர்கொள்ளும். கடைசி இரு போட்டிகளில் இந்திய அணி (நவ. 5, 8), தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறும் அணிகளுடன் மோதும். அரையிறுதி போட்டிகள் நவ. 10 (அபுதாபி), 11ல் (துபாய்) நடக்கும். நவ. 14ல் பைனல் துபாயில் நடக்கவுள்ளது. நவ. 15, ‘ரிசர்வ் டே’ ஆக அறிவிக்கப்பட்டது.