உடற்தகுதியை வளர்த்ததால் எளிதாகிவிட்டது – சதம் விளாசிய அவிஷ்க

03.09.2021 14:18:16

உடற்பயிற்சியில் காட்டிய முன்னேற்றத்தினால், வழக்கத்தை விடவும் சிறப்பாக விளையாடுவதை தான் உணர்வதாக  நேற்றைய போட்டியில் சதம் விளாசிய இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 118 ஓட்டங்கள் எடுத்த அவிஷ்க, இலங்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 

போட்டியின் முடிவில் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

உடற் தகுதியில் முன்னேற்றம் இல்லாதமையினால் நான் முன்னர் போதிய துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் போட்டிகளைக் கூட தவறவிட்டுள்ளேன்.

இதன் காரணமாக நான் எனது ‘உடற்தகுதியை’ மேம்படுத்தினேன். 

அதனால் போட்டியில் பந்தை எதிர்கொண்டு ஆடுவது எனக்கு மிகவும் எளிதனாது. இது எனது பேட்டிங்கிற்கு மட்டுமல்ல, சகலதுறையினையும் எளிதாக்குகிறது என்று நான் நினைக்கிறேன்.

அவிஷ்க உடற் தகுதி தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷுக்கான சுற்றுப் பயணத்தை தவறவிட்டார்.

இந் நிலையில் இலங்கைக்கான இந்திய சுற்றுப் பயணத்தில் உடற் தகுதியினை மேம்படுத்தியதன் பின்னர் அணிக்கு திரும்பிய அவிஷ்க, எதிர்கொண்ட நான்கு இன்னிங்ஸுகளில் 33, 50, 76 மற்றும் 118 ஓட்டங்களை எடுத்துள்ளார்.