கட்டுப்பாடுகளுடன் பெண்கள் படிக்கலாம்; தலிபான்

13.09.2021 09:20:57

'பல்கலைக்கழகங்களில் பெண்கள் மேற்படிப்பு படிக்க தடை ஏதும் இல்லை. ஆனால் ஆண்களுடன் சேர்ந்து படிக்க பெண்களுக்கு அனுமதி இல்லை. இஸ்லாமிய பாரம்பரிய உடையை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்,'' என, ஆப்கானிஸ்தான் உயர் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் பாகி ஹக்கானி தெரிவித்தார்.


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் அமைத்துள்ள அரசின் செயல்பாடுகளை அனைத்து நாடுகளும் கண்காணித்து வருகின்றன.கடந்த 1996 - 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பிற்போக்குத்தனமான விதிகளை வகுத்தனர். பெண்கள் படிக்கவும், ஆண் துணைஇன்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டது. இசை, நடனம் போன்ற கலைகளுக்கு தடை போடப்பட்டது. 'இந்த முறை அவ்வளவு கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம்' என, தலிபான்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கன் உயர் கல்வித் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் பாகி ஹக்கானி கூறியதாவது:நாட்டை 20 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்ல தலிபான்கள் விரும்பவில்லை. இன்றைக்குள்ள வளர்ச்சியின் அடிப்படையில் நாட்டை கட்டமைக்கவே விரும்புகிறோம்.பல்கலை சென்று படிக்க பெண்களுக்கு தடை இல்லை. ஆனால், அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தலையில் இருந்து கால் வரை மறைக்கும் இஸ்லாமிய பாரம்பரிய உடைகளை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்.ஆண்களும், பெண்களும் இணைந்து படிப்பதை அனுமதிக்க முடியாது.பெண்கள் தனியாக படிக்க எந்த தடையும் விதிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தலிபான் கொடி ஏற்றம்

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 20வது நினைவு நாளான நேற்று முன்தினம், காபூலில் உள்ள ஆப்கன் அதிபர் மாளிகையில் தலிபான்களின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.அந்நாட்டு பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா முகமது அகுந்த் கொடியை ஏற்றினார். இதன் வாயிலாக புதிய அரசு அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தலிபான் கொடி ஏற்றம்அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 20வது நினைவு நாளான நேற்று முன்தினம், காபூலில் உள்ள ஆப்கன் அதிபர் மாளிகையில் தலிபான்களின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. அந்நாட்டு பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா முகமது அகுந்த் கொடியை ஏற்றினார். இதன் வாயிலாக புதிய அரசு அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

'மாஜி' அதிபர் நம்பிக்கை!

 

கடந்த 2001ல் தலிபான்களை அமெரிக்க படைகள் விரட்டி அடித்த பின், ஆப்கனின் முதல் அதிபராக ஹமித் கர்சாய் பதவி ஏற்றார். தற்போது தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியுள்ள நிலையில், காபூலில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நினைவு தினத்தன்று, பழங்குடியின தலைவர்களை தன் வீட்டில் வைத்து சந்தித்தார். 'புதிய அரசு அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அரசாகவும், ஆப்கானிஸ்தானின் உண்மையான முகமாகவும் திகழும்' என நம்பிக்கை தெரிவித்தார்.
 

ஐ.எஸ்.ஐ., கூட்டம்!

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஹமீது, சீனா, ரஷ்யா, ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், தர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் உளவுப் பிரிவு தலைவர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.அப்போது ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது