இனப்பிரச்சினை தீர்வுக்கு சாதகமான உறுதியளிப்பு - மகிந்த
இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடினார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைகள்
இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் அதிபர் மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ச சம்பந்தனிடம் உறுதியளித்தார்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.