புதிய அவைத்தலைவர் பதவியைப் பிடிக்க ஓபிஎஸ், இபிஎஸ் அணி பலப்பரீட்சை

11.10.2021 17:14:33

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இன்று அவசரமாக கூடியது. புதிய அவைத்தலைவர் யார்? என்பது குறித்தும், சசிகலா குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

புதிய பதவியைப் பிடிக்க இரு அணியினரும் தீவிரமாக முயன்று வருவதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது.

எதிர்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இருவரும் எதிர்கட்சி தலைவர் பதவியை பிடிப்பதில் தீவிரம் காட்டினர்.



ஆனாலும் கொங்கு மண்டலத்தில் இருந்து அதிக அதிமுக எம். எல். ஏக்கள் வெற்றி பெற்றதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் இடையே ஒற்றுமை இல்லாமல் தனித்தனி அணியாக அதிமுகவில் செயல்பட்டு வருகின்றனர்.

 

தமிழகத்தில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து அறிக்கை வெளியிடும்போது கூட இரண்டு பேரும் தனித்தனியாக தங்களது லெட்டர் பேடில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக கட்சி சார்பில் அறிக்கைகள் வெளியிடுவதில்லை.

இதன்மூலம் இருவருக்கான மோதல் போக்கு வெளிப்படையாக தெரியவருகிறது. இதனால் அதிமுக தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலிலும் அதிமுகவில் ஒற்றுமை இல்லை. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய கட்சியான பாமக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது.

அதேபோன்று சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவும், அதிமுகவை கைப்பற்ற பல்வேறு ரகசிய திட்டங்களை தீட்டிவருவதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்தபோதே 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அவர் செல்போனில் பேசிவந்தது அம்பலமாகியுள்ளது.

 

அடுத்து வருகிற 17ம் தேதி அதிமுக தொடங்கி 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி வருகிற 16ம் தேதி சசிகலா, ஜெயலலிதா சமாதிக்கு சென்று பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவில் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மரணமடைந்தார். இந்தப் பதவியைப் பிடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மதுசூதனன், ஆரம்பத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். பின்னர் கடைசி காலத்தில் இபிஎஸ் அணிக்கு மாறிவிட்டார்.

 

மேலும் கட்சியில் தற்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவைத் தலைவர் பதவியைப் பிடிக்க அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

ஓ. பன்னீர்செல்வமோ, கட்சியின் அமைப்புத் தேர்தல் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு அவைத் தலைவர் குறித்து முடிவு எடுக்கலாம் என்று கூறி விட்டார். அதோடு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் தனக்கான ஆதரவு கூட்டத்தை அதிகரிக்க, இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் பன்னீர்செல்வம்.
இந்த பரபரப்பான சூழலில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.