பாகிஸ்தானில் 4-ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை

07.05.2022 11:37:57

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள நாடுகளின் வரிசையில் டாப் 10ல் பாகிஸ்தான் உள்ளது. பருவகால மாற்றம், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஐ.நா. பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச உணவு நெருக்கடி பற்றிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியானது. இதன்படி, பாகிஸ்தானில் 4ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, வறட்சியான சூழ்நிலை, கால்நடை வியாதிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் தேசிய அளவில் அந்நாட்டில் உணவின் விலை அதிகரித்து உள்ளது.

இதேபோன்று, பலூசிஸ்தான் மற்றும் சிந்த் மாகாணங்களில் வறட்சி நிலை ஏற்பட்டு தனிநபர் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை பொழிவு குறைவால், கால்நடை மற்றும் பயிர் உற்பத்தி குறைந்ததும் பாதிப்புக்கான காரணிகளாக உள்ளன.

கைபர் பக்துன்குவா மாகாணத்திலும் இதே நிலை காணப்படுகிறது. தீவன பற்றாக்குறை, குறைவான அளவிலேயே தண்ணீர் கிடைப்பது உள்ளிட்டவற்றால் நிலைமை மிக மோசம் என கூறப்படுகிறது.