காணிகள் விடுவிப்பு வெளிப்படையானதாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும்!
|
தனியார் காணிகளை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் வெளிப் படையாகவும் நியாயமாகவும் தொடர வேண்டும் என்றும் உரிமைகள் மீட்டெடுக்கப்படும், மக்களால் கேட்கப்படும் மற்றும் சமூகங்கள் செழிக்க அதிகாரம் அளிக்கப்படும் இடங்களில் மட்டுமே நல்லிணக்கம் வேரூன்றும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் எண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
|
|
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிலத்தை உரிய உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுப்பது என்பது கண்ணியத்தை மீட்டெடுப்பது, காயங்களை குணப்படுத்துவது மற்றும் நம்பிக்கையை வளர்ப்பது பற்றியது. இது குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் வறுமைச் சுழற்சியிலிருந்து விடுபடவும் உதவுகிறது. யாழ்ப்பாணம்பலாலி பகுதியில் தனியார் நிலங்களை விடுவிப்பதில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு வரவேற்கத்தக்க படியாகும்.ஐக்கிய நாடுகள் சபை இலங்கை இந்த செயல்முறையை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம்பலாலி பகுதியில் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிப்பது தொடர்பான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் தற்போதைய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் அண்மையில் உயர்மட்டக் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமை தாங்கினார்.மேலும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். காணிகளை மீண்டும் கையளிக்கும் வேலை திட்டத்தின் போது ஏற்படுகின்ற செயற்பாட்டு மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்ப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக இராணுவ வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அந்த காணிகளில் உள்ள இராணுவத்தின் கட்டம் கட்டமாக மீளப்பெறுவது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பாதுகாப்பு நிலைகளில் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுமக்களின் சொத்துகளுக்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படாத விதத்தில் புதிய எல்லை சீரமைப்புகளை இறுதி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்கத்தின் முக்கிய அங்கமாக காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதி அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். |