சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மதராசி'

03.07.2025 07:08:00

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மதராசி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த சிங்கிள் பாடல் ஒரு குத்துப் பாடலாக இருக்கும் என்றும், இது படத்தின் தொடக்கக் காட்சிக்கான பிரம்மாண்டமான பாடலாக உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

'மதராசி' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். மேலும், வித்யுத் ஜம்வால் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் ₹200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தின் மூலம் தனது கம்பேக்கை உறுதி செய்வார் என்றும், இது அவருக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.