எமது பலத்தை மேதினத்தில் காட்டுவோம்
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கொழும்பு பஞ்சிகாவத்தை டவர் மண்டபத்துக்கு அருகில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
ஒரு இலட்சம் ஆதரவாளர்களை ஒன்று திரட்டுவதே எமது இலக்காகும். அன்றைய தினம் எமது பலத்தைக் காட்டுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பின் தள்ளப்பட்டிருந்தது. என்றாலும் நாடு வீழ்ச்சியடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்து,
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார். இதனால் ரணில் விக்கிரமசிங்க மீதும் ஐக்கிய தேசிய கட்சி மீதும் மக்களுக்கு தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இம்முறை மேதின கூட்டத்தைக் கொழும்பு பஞ்சிகாவத்தை டவர் மண்டபத்துக்கு அருகில் நடத்துவதற்குத் தீர்மானித்தோம்.
ஆரம்பத்தில் சுமார் 50ஆயிரம் ஆதரவாளர்களை ஒன்று திரட்டுவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. என்றாலும் கட்சி தொகுதி அமைப்பாளர்களின் வேண்டுகோள் மற்றும் பலரது கோரிக்கைக்கு அமைய ஒரு இலட்சம் ஆதரவாளர்களின் பங்குபற்றலுடன் மேதினத்தை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அத்துடன் வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கான முறையான வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த வேலைத்திட்டத்துக்கு ஆதரவளித்து எம்முடன் இணைந்துகொள்ளப் பலரும் தயாராகி இருக்கிறனர்.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க இருக்கும் பலரும் மேதின கூட்டத்தின்போது எம்முடன் இணைந்துகொள்ள இருக்கிறார்கள் என்றார்.