பிள்ளையான்- சலே தொடர்புகள் குறித்து அம்பலப்படுத்தினார் கருணா!

05.07.2026 13:40:13

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட சில விடயங்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) என்பவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக சிங்கள் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, பிள்ளையான் தரப்பினருக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் அவர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பிள்ளையானின் குழுவினருக்கு தங்குமிட வசதிகளை வழங்கியபோது, சுரேஷ் சலேவினால் தொடர்புபடுத்தப்பட்ட நபர்களே அந்த வசதிகளை வழங்கியதாகவும், அதற்கான நிதி வசதிகளும் அவர்களாலேயே வழங்கப்பட்டதாகவும் கருணா அம்மான் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகிய இருவருமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து வந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகால பகை இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில், பிள்ளையான் தரப்பினரால் பொலன்னறுவை, வெலிக்கந்தை பகுதியில் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. கொழும்பு நகருக்குள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த தரப்பினர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.