இராஜதந்திரம் என்று கூறுவதை நாங்கள் தொடர்ச்சியாக ஏற்கப் போகிறோமா? ஐங்கரநேசன் கேள்வி

26.12.2021 17:11:12

ரு கட்சியிலேயே இருக்கக் கூடிய ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியாமல் என்ன நாங்கள் பேசப் போகின்றோம் என்பது தெரியாமல் போய்விட்டு வந்து இராஜதந்திரம் என்று கூறுவதை நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றுக் கொண்டு இருக்கப் போகிறோமா என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் கேள்வியெழுப்பினார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஒரு சிலர் இராஜதந்திரம் என்று கூறுகின்றனர். அவர்கள் நல்லாட்சி அரசின் காலப்பகுதியிலும் அதனையே கூறினர். இன்றும் அதனையே கூறுகின்றனர்.
இராஜதந்திரம் என்பது நாடுகளுக்குரியது. நாடுகள் பல்வேறு வகையான அழுத்தங்களைப் பிரயோகித்து தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வதையே இராஜதந்திரம் என்பர். ஆனால் விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் அவர்கள் அரசுக்கான கட்டமைப்புக்களை கொண்டிருந்ததன் காரணமாக இராஜதந்திர பக்கம் இருந்தது. அன்டன் பாலசிங்கம் அந்த பாத்திரத்தை செய்திருந்தார். இன்று எல்லோருமே விடுதலைப் புலிகளாகவோ விடுதலைப் புலிகளின் தலைவராகவோ அன்டன் பாலசிங்கம் போலவோ ஆகிவிட முடியாது.

ஒரு கட்சியிலேயே இருக்கக் கூடிய ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியாமல் என்ன நாங்கள் பேசப் போகின்றோம் என்பது தெரியாமல் போய்விட்டு வந்து இராஜதந்திரம் என்று கூறுவதை நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றுக் கொண்டு இருக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகின்றது.அரசியல் கட்சிகளின் கூட்டு எதையும் சாதித்து விடப் போவதில்லை. நாளை தேர்தல் நடந்தால் இந்த கட்சிகள் எல்லாம் எதிரும் புதிருமாக இருக்கும்.

13வது திருத்தம் தொடர்பாக கட்சிகள் ஒன்று கூடுகின்ற பொழுதே உள்ளூராட்சி சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அந்த கட்சிகள் ஆளாளுக்கு குழிபறித்து தோற்கடிக்கின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களிலேயே இந்த கட்சிகள் இவ்வாறு செயற்பட்டால் நாடாளுமன்றத்திலும் மாகாணசபையிலும் இந்த கூட்டு எந்தளவு தூரத்திற்கு செயற்படப் போகிறது. ஆகவே இந்த இடத்தில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் பிரசன்னமும் அவசியம்.
அவர்களது கை ஓங்கி இருக்கின்ற பொழுது தான் கட்சி சார் அரசியல்வாதிகளை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

எங்களிடம் கட்சிகள்இருக்கின்றது. தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தேசிய தலைவர் என்று இல்லை. ஆனால் கட்சிகளின் தலைவர்கள் தங்களை தேசிய தலைவர்களாக கற்பிதம் செய்து கொள்வது அபத்தமானது என்றார்.