சிங்களக் குடியேற்ற முயற்சி: அதிகாரிகள் துணைபோகக் கூடாது- யோகேஸ்வரன்
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை பிரதேசத்தில் 178 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற முயற்சிக்கப்படுகின்ற நிலையில், அதிகாரிகள் பதவியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக துணைபோகக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீறிச் செயற்பட்டால் மக்கள் அதிகாரிகளுக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடாக மன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “காரமுனை என்கின்ற மாங்கேணி கிராம அதிகாரிக்குட்பட்ட தெற்கு பிரதேசத்தில் 178 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் குடியேற்றுவதற்கான செயற்றிட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, அந்தப் பகுதியில் குடியிருந்த சிங்கள மக்கள் 1985ஆம் ஆண்டு யுத்த சூழல் காரணமா இடம்பெயர்ந்ததாகக் காரணம் காட்டுகின்றனர். அந்த 178 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் குறித்த பகுதியில் இருக்கவில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது.
இந்த 178 குடும்பங்களும் குடியேறி 1985 வெளியேறியிருந்தால் அவர்கள் 1981ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அதனைக் கொடுப்பது நியாயமானது. சிங்கள மக்கள் இருந்த இடத்தில் அதைக் கொடுப்பதற்குத் தடையில்லை.
ஆனால், பிழையான முறையில் குடியேற்றுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். 1985 காலப்பகுதியில் உதவி அரசாங்க அதிபராக இருந்த வாகரைப் பிரதேசம், மாவட்டச் செயலகம், கச்சேரி ஆகியவற்றில் அவர்கள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கும்.
178 குடும்பம் என்பது பெரிய கிராமமாக இருக்கும் நிலையில், அங்கு பௌத்த விகாரை இருந்திருக்கும், பாடசாலை போன்ற பல கட்டடங்கள் இருந்திருக்கும், அந்தப்பகுதி மாணவர்கள் எந்தப் பாடசாலையில் கல்வி கற்றார்கள், பிறப்புச் சாட்சிப் பத்திரம் என சரியான முறையில் ஆவணங்கள் காட்டப்பட வேண்டும்.
இதேவேளை, காணிச் சட்டத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கு இரண்டு ஏக்கர் காணி வழங்கப்பட்ட நிலையில், இந்த 178 குடும்பங்களுக்கு ஐந்து ஏக்கர் காணி வழங்கப்படப் போகின்றது. அதற்கான அனுமதிப்பத்திரம் அவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
இது, முழுக்கமுழுக்கப் பொய்யான சட்டவிரோதமான நடவடிக்கை. இந்தக் காணி அனுமதிப்பத்திரம் யார் தயாரித்தாரே அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தத் திட்டமிட்ட வகையிலான குடியேற்ற நடவடிக்கைக்கு சில தமிழ் அதிகாரிகள் துணைபோயுள்ளனர். இந்தப் போலிச் செயற்பாட்டை நிறுத்திவைக்க நீதிமன்றத்தை நாடவுள்ளேன்.
இதேவேளை, அம்பாறையின் பொத்துவிலில் உள்ள கனகர் கிராமத்தில் நீண்டகாலமாக வாழ்ந்த, யுத்தத்தால் வெளியேறிய சுமார் 300 குடும்பங்கள் இன்றுவரை குடியேற்றப்படவில்லை.
இதனைவிட, கெவிலியாமடுவில் ஆயிக்கணக்கான ஏக்கர் காணியை ஊர்காவல் படையினரை வைத்து பயிர்ச் செய்கை என்ற பேர்வையில் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு மயிலத்தனைமடு மேச்சல்தரையும் சிங்கள மக்களைக் குடியேற்றத் திட்டமிடப்படுகிறது.
புனானையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கவேண்டும் என திம்புலாகல தேரர் 50 ஏக்கர் காணியை வாகரை பிரதேச செயலாளரிடம் கோரிக் கொண்டிருக்கின்றார். இவற்றுக்கெல்லாம் காரணம் மட்டக்களப்பு வனப் பரிபாலனசபையே.
சிறுதுண்டுக் காணியை தமிழ் மக்கள் பிடித்தால் உடனடியாக சட்டத்தை நாடுகின்றனர். ஆனால், காரமுனையில் 178 குடும்பங்களுக்கும் காணிவழங்க இங்கு இருக்கின்ற சிங்கள அதிகாரி பூரண ஆதரவை வழங்கியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.