ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடு கீழ்த்தரமானது!
|
சிங்கள பௌத்தத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒருதரப்பினர் மீண்டும் நாட்டில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடு கீழ்த்தரமானது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். |
|
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே ஞானசார தேரருக்கு கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் பிரகாரமே அவரது காவியுடை நீக்கப்பட்டுள்ளது.இதன் சட்ட தன்மையை சிறைச்சாலை தலைமையகம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஞானசார தேரர் விவகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியினரும், பொதுஜன பெரமுனவினரும் தான் தற்போது இனவாத கோணத்தில் திசைத்திருப்பியுள்ளனர்.ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டமை சிங்கள பௌத்தத்துக்கு எதிரானதொரு செயற்பாடு என்ற தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளனர். சிங்கள பௌத்தத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒருதரப்பினர் மீண்டும் நாட்டில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடு கீழ்த்தரமானது. இனவாதம், பௌத்தத்துவம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் செய்கிறது.இதுவொன்றும் புதிதல்ல, ஆனால் குறுகிய அரசியல் இலாபத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறான நிலைக்கு செல்வது முற்றிலும் தவறானது. சட்டத்தின் முன் அனைவரும் சமமாகவே மதிக்கப்பட வேண்டும். ஒருவர் வகிக்கும் பதவியை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சட்டத்தில் விசேட சலுகை வழங்கும் போது சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதையடையும். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றும் போது ஜனாதிபதி நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினார்கள்.ஆனால் இன்று ஞானசார தேரர் விவகாரத்தில் தலையிடுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்கிறார்கள்.இதுவே இவர்களின் இரட்டை நிலைப்பாடு என்றார். |