நான் புரட்சி இயக்குனர் இல்லை: சுந்தர்.சி.

11.10.2021 18:07:11

சுந்தர் சி இயக்கத்தில் மூன்றாவது பாகமாக உருவாகியுள்ள படம் அரண்மனை 3. ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் இப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி வெளியிடுகிறார். படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர்.சி பேசியதாவது:

அரண்மனை 1, 2 வெற்றியை தொடர்ந்து இப்போது அரண்மனை 3 படத்துடன் வருகிறோம். எல்லோரும் உங்களுக்கென்ன சார் ஜாலியா அரண்மனை படங்களை எடுத்து விடுகிறீர்கள் என்கின்றனர், ஆனால் தொடர் பாகங்களை எடுப்பது தான் இருப்பதிலேயே கஷ்டமான விஷயம். ஏனென்றால் புதுசா ஒரு படம் எடுக்கும்போது ஆடியன்ஸ் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவார்கள், அதில் ஏதோ ஒரு விஷயம் அவர்களுக்கு பிடித்து விடும், அதனால் படமும் ஹிட்டாகிவிடும். ஆனால் ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் பாகம் எடுக்கும் போது, அதில் ஏற்கனவே இருந்த விஷயங்களுடன் புதிதாகவும் எதிர்பார்ப்பார்கள், அதனால் அரண்மனை எடுப்பது மிகவும் சவாலான விஷயம்.

ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் எனக்கு நல்ல லாபம் கொடுத்த படம் அரண்மனை. அதனால் அதன் பாகத்தை எடுக்கும் போது, நல்ல கதை நடிகர்கள் கிடைக்க வேண்டும் என நினைத்தேன. அந்த வகையில் இந்த படத்தில் நல்ல கதையுடன், சிறந்த நடிகர் பட்டாளமும் கிடைத்தது.
ஆர்யா தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பக்கூடிய நாயகன். சம்பளம் வாங்கிக் கொண்டு ஒதுங்கி விடாமல், இப்போது படத்தின் ரிலீஸ் வரை, பெரும் அக்கறையுடன் இருக்கிறார். ராஷி கண்ணா ஒரு நல்ல நடிகை. படம் முடிவதற்குள் தமிழ் கற்றுக் கொண்டு விட்டார், அவரது அர்ப்பணிப்பு அவரை பெரிய இடத்திற்கு எடுத்துச் செல்லும்.

இந்த படத்தில் நடிகர் விவேக் ஒரு மிகச்சிறந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். எங்களுக்கெல்லாம் உடம்பை பார்த்துக் கொள்ள நிறைய அட்வைஸ் செய்வார். அவருக்கு இந்தப் படம் கடைசி படமாக இருக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைப்பற்றி மறக்க முடியாத நினைவுகள் நிறைய இருக்கிறது.

நான் ஒரு சிம்பிள் டைரக்டர். என்னிடம் மக்களுக்கு அறிவுரை செய்யும் புரட்சிக் கருத்துக்கள் எதுவும் இல்லை. என் படம் பார்ப்பவர்கள் கவலை மறந்து 2 மணி நேரம் சிரித்து மகிழ வேண்டும். அரண்மனை 3 முந்தைய பாகங்களை விட பிரமாண்டமாக இருக்கும். திருவிழா காலத்தில் திரையரங்கில் திருவிழா போல் இப்படம் இருக்கும்.

இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.