பலாலி மக்களின் நிலத்துக்கான போராட்டம் நீடிப்பு!
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்புப் போராட்டம் இன்று 17ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளக் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்டகாலமாகத் தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வை வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதியவர் ஒருவர், தாங்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 36 ஆண்டுகளாக வேறு இடங்களில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தங்களைத் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவர், “எங்கள் இறப்பாவது எங்கள் சொந்த மண்ணில் நிகழ வேண்டும் என்பதே எமது இறுதி ஆசை” என வேதனையுடன் தெரிவித்தார்.
இதேவேளை, கடும் வெயிலுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார். அவருக்கு ஏனைய போராட்டக்காரர்கள் முதலுதவி வழங்கி, நிழலில் அமர வைத்துள்ளனர்.
இவ்வாறு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டபோதிலும், குறித்த பெண் போராட்டம் நிறைவடையும் வரை அங்கு தங்கியிருந்து தனது ஆதரவை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.