தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வுகள்?

04.12.2024 08:06:00

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே வங்கக்கடலில் போக்கு காட்டி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒருவழியாக பெஞ்சல் புயலாக உருமாறியது.

   

அதே நேரத்தில் மிகவும் மெதுவாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. " காட்டாற்று வெள்ளத்தில் 18 மணி நேரமாக சிக்கித் தவிக்கும் பேருந்து.. வேலூர் அருகே 15 பயணிகள் தவிப்பு!" சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதனால் புதுச்சேரி மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. மேலும் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதே போல விழுப்புரம் மாவட்டத்திலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. திருவண்ணாமலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக திடீரென ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து அந்த பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மீட்பு பணிகளை பார்வையிட்டு அதனை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. வழக்கமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்திருந்தது.

இதை அடுத்து அரையாண்டு தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒருபுறம் மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு அரையாண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

டிசம்பர் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கும் எனவும், டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையும், ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு விடுமுறை அடங்கும். மொத்தம் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வினை ஒத்தி வைக்க பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று சென்னையில், சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அரசு பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி காட்சி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் அறிவுறுத்திய நிலையில், தற்போது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.