அம்மாவின் ஆட்சியை விட நல்லாட்சி தரும் விஜய்.
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை வந்துள்ளார்.
அண்மையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், இன்று அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைகிறார். இதற்காக அவரது சொந்த மாவட்டமான புதுக்கோட்டையிலிருந்து சுமார் 200 பேருந்துகளில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சென்னைக்குத் திரண்டு வந்துள்ளனர்.
சென்னை வந்திறங்கிய விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் யூடியூப் சேனல்களுக்கும் ஊடகங்களுக்கும் அளித்து வரும் பேட்டிகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிளப்பியுள்ளன. குறிப்பாக, "மறைந்த முதல்வர் அம்மாவின் ஆட்சியை விட, தற்போது இருக்கும் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது; தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடந்து வருகிறது" என்று அவர்கள் வெளிப்படையாக பாராட்டி பேசி வருகின்றனர்.
மேலும், இத்தனை ஆண்டுகள் அதிமுக-வில் உழைத்தும் தங்களுக்கு அங்கு எந்தவிதமான மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை என்றும், இபிஎஸ் தலைமையிலான தற்போதைய அதிமுகவில் தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களின் தலைவர் விஜயபாஸ்கர் எடுக்கும் இந்த அதிரடி முடிவுக்கு துணையாக தாங்களும் தவெக-வில் இணைந்து இந்த நல்லாட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என அவர்கள் பிரகடனம் செய்துள்ளனர். கொங்கு மற்றும் புதுக்கோட்டை மண்டல அதிமுகவின் முக்கிய தூணாக இருந்த விஜயபாஸ்கரின் இந்த முடிவு, அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.