இடிந்து விழுந்த வங்கி கட்டிடம்.
வங்கி கட்டடத்தின் இடிபாடுகளில் பல நுாறு கோடி ரூபாய் புதைந்திருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து, ஏராளமானோர் அதை தேடி அலைந்த சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவின் பெலன்கஞ்ச் பகுதியில், கனரா வங்கியின் கிளை, கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இதன் அருகே, வணிக வளாகம் கட்டுவதற்காக 40 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இதனால், பலவீனமடைந்த வங்கி கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்தது மதிய நேரம் என்பதால், வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் பெரிதாக இல்லை. இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கட்டடம் சரிந்தவுடன், இடிபாடுகளுக்குள் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கைகளில் கோணி பைகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து, இடிபாடுகளுக்கு இடையே பணத்தைத் தேடத் தொடங்கினர்.
நிலைமை மோசமானதை அடுத்து, வங்கி அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இடிபாடுகளில் இருந்த 25 லட்சம் ரூபாய் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மற்றொரு கிளைக்கு பத்திரமாக மாற்றப்பட்டது.
இடிபாடுகளில் சிக்கிய லாக்கர்களை துளையிட்ட மீட்பு படையினர், அதில் இருந்த நகைகள் மற்றும் ஆவணங்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.