கைச்சாத்திடவுள்ள 5 ஒப்பந்தங்கள் என்ன?

25.03.2025 08:37:56

இலங்கைக்கு வர இருக்கும் இந்திய பிரதமரின் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சக்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் இலங்கையில் அவரின் நிகழ்ச்சித்திட்டம் என்ன என அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் இந்திய ஊடகங்கள் அதுதொடர்பில் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

வெளிநாடுகளுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் தொடர்பில் கைச்சாத்திடும்போது அது தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அங்கு இந்திய அரசாங்கத்துடன் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தார். ஆனால் அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் முன்கூட்டி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் அதனை வெளியிட்டிருந்தன.

அதேபோன்று தற்போது இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என அரசாங்கம் இதுவரை வெளியிடாத நிலையில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கம் நினைத்த பிரகாரம் செயற்பட முடியாது. அதற்கு அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால் இந்திய பிரதமருடன் அரசாங்கம் கைச்சாத்திட இருக்கும் 5புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.