தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும்!

25.10.2026 15:25:43

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும். பெருமளவில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடங்களில் பணியாற்றிய சொந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கான சர்வதேசக் கூட்டமைப்பொன்றை கனடாவினால் உருவாக்கமுடியும் என கலாநிதி மரியோ அருள்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் பகிர்ந்துகொண்ட விடயங்கள் வருமாறு:

செம்மணி நிலப்பரப்பு எமக்கு எந்தவகையில் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் 30 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்று, அப்படுகொலைகளுடன் தொடர்புடையவர்களின் கதைகளை அறியவேண்டும்.

1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அங்கு அவர்கள் முகாம்கள், சோதனைச்சாவடிகள் மற்றும் படைத்தளங்கள் உள்ளிட்ட ஒரு நெருக்கமான வலைப்பின்னலை உருவாக்கினர். இதனூடாக யாழ்ப்பாணத்தை உலகிலேயே அதிகளவில் இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாற்றினர். இவை விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும், உண்மையில் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை எவராலும் மறைக்க முடியாது.

இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி நிலம் என்பது இனப்படுகொலையின் ஒரு குறியீடாகவும், அரச வன்முறையின் இன்னமும் தீர்வு காணப்படாத களமாகவும் திகழ்கிறது. இலங்கையில் இன்னமும் தொடரும் தண்டனையற்ற போக்குக்கு இதுவொரு சான்றாகும். மனிதப்புதைகுழிகள் என்பன போரின் தற்செயலான எச்சங்கள் அல்ல. மாறாக அவை அரசின் திட்டமிட்ட நோக்கத்தின் வெளிப்பாடுகளாகும். மனித உயிர்களை அழித்து, உண்மையை மண்ணுக்கு அடியில் புதைப்பதற்கான பௌதிக ரீதியான ஒரு முயற்சியையே இவை குறிக்கின்றன.

1996இல் கிருஷாந்தி குமாரசுவாமியும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்ட அதே ஆண்டில், யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயினர். அந்த ஆண்டில் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 700 க்கும் அதிகம் என்று கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் சிறிய பரப்பளவு கொண்ட ஒரு பகுதியில் இத்தனை உயர் எண்ணிக்கையிலான மக்கள் காணாமல்போனமை மிகுந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணியில் அண்மையகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பல நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதங்களிலும் அகழ்வாய்வு நடவடிக்கைகள் தொடரவுள்ளன. ஆனால் இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு அவசியமான நிபுணத்துவமோ அல்லது அரசியல் தன்முனைப்போ இலங்கை அரசிடம் இல்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கும், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிவதற்காகக் காத்திருக்கும் உறவுகளுக்கு உரிய பதில்களைக் கூறுவதற்கும் இப்போது கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை அடிப்படையாகக்கொண்டு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். அத்தோடு இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

இருப்பினும் இலங்கை அரசின் நீண்டகால வரலாற்றில் தொடர்ந்து நிலவும் இந்தத் தண்டனையற்ற சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. இலங்கை அரச இயந்திரமானது அதன் எல்லைக்குள் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்துக்கு எதிராக இராணுவத்தினர் இழைத்த குற்றங்களை விசாரணைக்கும் திறனுடையதாகக் கட்டமைக்கப்படவில்லை.

வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு வழிகோலிய சட்டக் கட்டமைப்புக்கள் இன்றும் நீடிக்கும் நிலையில், செம்மணியை கடந்த காலத்தின் ஒரு எச்சம் என்று மாத்திரம் கூறிவிடமுடியாது. சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாதத்தடைச்சட்டம் எனும் மிகமோசமான சட்டமானது தன்னிச்சையான கைதுகள், விசாரணையற்ற நீண்டகாலத் தடுப்புக்காவல், திட்டமிட்ட சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றுக்கு ஓர் சட்டபூர்வ அடித்தளத்தை வழங்கியது. சர்வதேச அழுத்தம் காரணமாக இச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்த போதிலும், தற்போது அதனைப் பதிலீடு செய்து புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கமையப் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானது என சட்ட வல்லுனர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர். எனவே செம்மணியில் மனிதப்புதைகுழிகளை உருவாக்கிய அரச இயந்திரம் இன்றும் அவ்வாறே நீடிக்கிறது.

இவ்வாறு இலங்கையில் தொடர் ஒடுக்குமுறையும், தண்டனையற்ற போக்கும் நிலவுவதனால் தான், இவ்விவகாரத்தில் கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர்களுக்கான நீதியைப் பொறுத்தமட்டில், மிகமுக்கிய தருணங்களில் கனடா உண்மையானதும் துணிச்சலானதுமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கையின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் கனடா இதுவரை வெளிப்படுத்திய தலைமைத்துவத்தைத் தொடர்ந்து முன்கொண்டு செல்லவேண்டும்.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும். பெருமளவில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடங்களில் பணியாற்றிய சொந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கான சர்வதேசக் கூட்டமைப்பொன்றை கனடாவினால் உருவாக்கமுடியும் எனச் சுட்டிக்காட்டினார்.