ஐரோப்பிய நாடொன்றை ஸ்தம்பிக்க வைத்த பொதுமக்கள்!

14.12.2025 15:17:43

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் மாக்யார் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் விக்டர் ஓர்பனின் அலுவலகங்களை முற்றுகையிட்டு பேரணி நடத்தியுள்ளனர். சிறார் சீர்திருத்த மையத்தில் துஷ்பிரயோக ஊழல் தொடர்பாக பிரதமர் விக்டர் ஓர்பனை ராஜினாமா செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். சிறார்களைப் பாதுகாக்கவும் என்ற வாசகங்கள் கொண்ட பதாகையுடன், கடும் குளிர் வீசும் புடாபெஸ்டின் தெருக்களில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வழக்கில் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மென்மையான பொம்மைகள் மற்றும் தீப்பந்தங்களை ஏந்திச் சென்றுள்ளனர்.

அரசு நடத்தும் புடாபெஸ்ட் இளையோர் மையத்தில் இருந்து இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு சட்டத்தரணி அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில், தனது 15 ஆண்டுகால ஆட்சிக்கு மிகக் கடினமான சவாலை எதிர்கொள்ளும் ஓர்பன், துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைக் கண்டித்துள்ளார்.

அத்துடன், நடந்த சம்பவம் ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குற்றச்செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவிக்கையில்,

நாளுக்கு நாள் மேலும் மேலும் அருவருப்பான விடயங்கள் வெளிப்படுகின்றன, இந்த நாட்டில் இதுபோன்ற விவகாரம் சாத்தியமில்லை என்று நான் நினைத்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், ஹங்கேரியின் ஐந்து சிறார் சீர்திருத்த மையங்களை அரசாங்கம் நேரடி காவல்துறை மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்தது, அதே நேரத்தில் சட்டத்தரணிகள் வழக்கை விசாரித்து வந்தனர்.

இதனிடையே, விபச்சாரக் குழு ஒன்றை நடத்துதல், பணமோசடி மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், மையத்தின் முன்னாள் இயக்குநரை பல மாதங்களாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.