கைவிடப்பட்டதா விஜய் சேதுபதி & ஹரி படம்?

10.02.2025 07:10:00

தமிழ் சினிமாவில் சாமி, ஆறு, சிங்கம், தாமிரபரணி என வரிசையாக பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஹரி. சமீபகாலமாக அவருக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன சூர்யா திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் அவர் அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கினார்.

கடைசியாக விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரத்னம் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் அவரின் கேரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து அவர் புதிதாக படங்கள் எதுவும் இயக்காமல் உள்ளார். தமிழ் சினிமாவின் ட்ரண்ட் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். அப்படி மாறும்போது அதனோடு சேர்ந்து மாறாமல் இருக்கும் இயக்குனர்கள் அவுட்டேட் ஆகிவிடுவார்கள். அப்படி ஹரியும் அவுட்டேட் ஆகிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஹரி அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இப்போது அந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.