
அமெரிக்காவுடனான கூட்டறிக்கை எங்கே?
பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் இறுதி தீர்மானம் தொடர்பில் இலங்கை மற்றும் அமெரிக்க கூட்டு அறிக்கையை வெளியிடும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். ஆனால் இதுவரையில் கூட்டு அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக கேள்வி எழுப்பியுள்ளார். |
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற அரச நிதி மூலோபாய கூற்று வெளிப்படுத்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு எதிர்க்கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாடு வங்குரோத்து நிலையடைந்த போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் எதிர்க்கட்சியில் தான் இருந்தார்கள், ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சியில் இருந்தது. நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு அப்போதைய அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அப்போதைய அரசாங்கத்தின் தவறான நிதி முகாமைத்துவத்தினால் நாடு வங்குரோத்து நிலைடைய போகிறது என்பதை எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டு, முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அரசாங்கமும் அந்த நிபந்தனைகளை செயற்படுத்துகிறது. தொங்கு பாலத்தில் செல்ல வேண்டிய நிலை தான் காணப்படுகிறது. ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளில் இருந்து விலகினால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதை நாங்களும் நன்கு அறிவோம். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உண்மையை மறைக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் பலமுறை அரசாங்கத்திடம் வலியுத்தினோம். நாம் வலியுறுத்தியதை தொடர்ந்து ஜனாதிபதி சர்வ கட்சி தலைவர் கூட்டத்தை நடத்தினார். நாங்கள் பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தோம். தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் இறுதி தீர்மானம் தொடர்பில் இலங்கை மற்றும் அமெரிக்க கூட்டு அறிக்கையை வெளியிடும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் இதுவரையில் கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய 90 நாள் காலவகாசம் முடிவடையும் நிலையில் உள்ளது. அரசாங்கம் இந்த 09 மாத காலப்பகுதியில் பிரபல்யமாக எடுத்த திட்டங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளன. க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம், காட்டு விலங்கு கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு நேர்ந்தது என்னவென்பது மறைக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்துடன் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன ஆனால் சிறந்த பெறுபேறு கிடைக்கவில்லை என்றார். |