இந்தியாவுடனான இரகசிய உடன்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்!
|
இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரகசியமாக மேற்கொள்ளாது, அதன் முழுமையான விபரங்களை பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். |
|
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் 38 வருடங்களுக்குப் பின்னரான இலங்கை விஜயம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 38 வருடங்களுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பில் மாணவர் பரிமாற்றம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், 2025 ஏப்ரல் 5ஆம் திகதி இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றம் அல்லது மீளாய்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தபோதும், அது சமர்ப்பிக்கப்பட்டதற்கான தகவல் இல்லை. இதுகுறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேட்டபோது, இந்தியாவின் அனுமதியின்றி அதனை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வெளிநாட்டின் அனுமதி ஏன் தேவைப்படுகிறது. மேலும், இந்தியா நட்பு நாடாக இருந்தாலும், இலங்கையின் இறையாண்மையை எந்தளவுக்கு மதிக்கின்றது என்பது கேள்விக்குரியதாகும். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் வடக்குக்கு அதிகாரங்களைப் பகிரவும் இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இலங்கையின் அரசியலமைப்பு விடயத்தில் வெளிநாட்டு அரசாங்கம் அழுத்தம் கொடுப்பது இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கொழும்பு துறைமுகக் கப்பல் தளத்தின் 51 சதவீத பங்குகள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம், டிஜிட்டல் அடையாள அட்டை மற்றும் இந்தியா–இலங்கை பாலம் தொடர்பான விடயங்களும் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும். வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையும் இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து ஒப்பந்தங்களையும் இரகசியமாக மேற்கொள்ளாது பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றார். |