கொரோனா அச்சம்: 5வது டெஸ்ட் போட்டி ரத்து
கொரோனா அச்சம் காரணமாக, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்ட் முடிவில் இரண்டில் வென்ற இந்தியா, 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கும் கொரோனா உறுதியானது. இதனால், அவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர். இந்திய வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
மான்செஸ்டரில் 5வது போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய அணியில், ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனால், நேற்று மதியத்திற்கு மேல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. மேலும், இன்றைய போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் தயக்கம் காட்டினர். இது குறித்து பிசிசிஐக்கு கடிதம் எழுதினர்.
இதனை தொடர்ந்து, பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் 5வது போட்டியை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது.
இந்திய தரப்பில் சிலருக்கு கொரோனா உறுதியானதால், அச்சம் காரணமாக வீரர்களை இந்திய அணியினால் களமிறக்க முடியவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.