இந்தியாவை தவறாக எடை போடலாமா
‘‘இந்திய அணியை தவறாக எடை போட்டதால், இங்கிலாந்து அணி தற்போது நெருக்கடியில் உள்ளது,’’ என கவாஸ்கர் தெரிவித்தார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணியின் 368 ரன் என்ற இலக்கைத் துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 100/0 என இருந்தது. திடீரென ஏற்பட்ட சரிவு காரணமாக 210 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
இதுகுறித்து இந்திய அணி ‘ஜாம்பவான்’, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:
இந்தியாவுக்கு எதிரான தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியினர் கவனம் செலுத்த துவங்கி விட்டனர். அதில் எப்படி விளையாடுவது, வெற்றி பெறுவது என ஆலோசித்தனர். இங்கிலாந்து அணி, மீடியா செய்த இந்த மிகப்பெரிய தவறு காரணமாக, ஜோ ரூட்டுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஏனெனில் இந்தியா 2–1 என முன்னிலையில் உள்ளது மனதளவில் உற்சாகமாக செயல்பட உதவும். மான்செஸ்டரில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்துக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மாறாக, இந்திய அணியை குறைத்து எடை போட்டு விட்டனர். இதற்கான பலனை தற்போது அனுபவிக்கின்றனர். ஏனெனில் இனிமேல் அவர்களால் தொடரை வெல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.