சிரியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்கவும்:

09.12.2024 09:11:35

சிரியாவுக்கான அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறும், பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் என்றால் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் ட்ரூடோ அரசாங்கம் கனேடியர்களை வலியுறுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண அறிவுறுத்தலானது மத்திய கிழக்கு நாடான சிரியாவைத் தவிர்க்குமாறு கனேடிய மக்களை எச்சரிக்கிறது. சிரியாவில் நடந்தேறும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி, பயங்கரவாதம், குற்றவியல் நடவடிக்கைகள், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் போதல் உள்ளிட்டவையை கனேடிய அரசாங்கம் காரணமாக குறிப்பிட்டுள்ளது.

   

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் எதிர்க்கட்சிப் படைகள் நுழைந்த பின்னர், அசாத் அரசாங்கத்தின் அரை நூற்றாண்டு ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அசாத் ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு வெளியேறினார். நாட்டை மொத்தமாக தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்தற்கான தனது கிட்டத்தட்ட 14 ஆண்டுகால போராட்டத்தை இதனால் அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

நவம்பர் 2011 முதல் சிரியாவை விட்டு வெளியேறுமாறு கனடா தனது குடிமக்களை வலியுறுத்தி வந்துள்ளது, மேலும் டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம் 2012 இல் அதன் நடவடிக்கைகளை நிறுத்தியது.

டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மற்றும் சில எல்லைக் கடப்புகள் மூடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதாகவே கனடா எச்சரித்துள்ளது.