யாழ். மாவட்டத்தில் 3 மாதங்களில் 80 பேர் உயிர்மாய்ப்பு!
|
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.
|
|
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (11) மாலை நடைபெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டது. தேசிய மட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு சுமார் 30 பேர் என்ற அளவில் இவ்வாறான உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்தப் போக்கு அதிகரித்து வருவதும் கவலைக்குரிய விடயமாகக் குறிப்பிடப்பட்டது. மது பாவனைக்கு அடிமையாதல், குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்பாடல் குறைவு, பெற்றோர் – பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான நெருக்கம் குறைவடைதல், தனிமை, சமூக மற்றும் உளவியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்நிலைக்கு செல்வாக்குச் செலுத்தி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கலந்துரையாடலில் எடுத்துரைத்தனர். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையின் முயற்சிகள் மட்டும் போதுமானதல்ல் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆபத்தான மனநிலையிலிருந்து மீட்கப்பட்ட நபர்களுக்கான தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆலோசனைச் சேவைகளில் காணப்படும் குறைபாடுகள், பால்நிலை வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கான பல்துறை ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் போதுமானளவில் இடம்பெறாமை உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடலில் அடையாளம் காணப்பட்டன. அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறும், பதிவாகியுள்ள உயிரிழப்புகள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொண்டு, காரணிகளை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இந்தத் தடுப்புச் செயற்றிட்டம் சுகாதாரத் துறையின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல், கல்வி, சமூக சேவைகள், நிர்வாகம், பொலிஸ், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய மாகாணளவிலான சமூக இயக்கமாக அமைய வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். அதற்காக கள மட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பிலேயே தற்போது மிகப்பெரிய இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இணைக்கும் செயற்பாட்டு பொறிமுறையை மீளச் செயற்படுத்துமாறும் அறிவுறுத்தினார். மேலும், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடனும் சமூக நலனைக் கருத்திற்கொண்டும் வெளியிடுவதன் அவசியமும் கலந்துரையாடலில் விசேடமாக வலியுறுத்தப்பட்டது. |