அவசரகாலச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படமாட்டாது!
|
கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் அவரகால சட்டம் தொடர்பில் எமக்கும் மோசமான அனுபவங்கள் உள்ளன. கடந்த கால மோசமான அனுபவங்களை கொண்டு எம்மையும் மதிப்பிட வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அவசரகால சட்டம் நாட்டு மக்களின் நலனுக்காகவே தற்காலிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம். எக்காரணிகளுக்காகவும் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். |
|
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளையின் கீழான அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அத்தியாவசிய சேவை வழங்கலையும் வினைத்திறனாக்கும் வகையில் தான் அவசரகால சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை கொண்டு எவரும் கைது செய்யப்படவில்லை. போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் இடம்பெறவில்லை. பொதுச்சட்டத்தின் பிரகாரமே போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தித்வா அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்காகவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அனர்த்ததால் பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதமானோருக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படுகிறது. அனர்த்த நிலை மீண்டும் ஏற்படும் அவதானம் உள்ள இடங்களில் பொதுமக்களை குடியமர்த்த முடியாது. இதனால் தான் ஒருசில பகுதிகளில் மீள்குடியமர்த்தலில் தாமதம் காணப்படுகிறது. பாடசாலை மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.கடற்றொழிலாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சகல தொழிற்றுறையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகள், புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புனரமைப்புக்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக குறைகளும் செயற்பட முடியாது. மீண்டும் இவ்வாறானதொரு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு தரத்துடன் புனரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறோம்.இதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் அவரகால சட்டம் தொடர்பில் எமக்கும் மோசமான அனுபவங்கள் உள்ளன. கடந்த கால அனுபவங்களை கொண்டு எம்மையும் மதிப்பிட வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.அவசரகால சட்டம் நாட்டு மக்களின் நலனுக்காகவே தற்காலிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார். |