நவம்பர் மாதத்தில் புதிய அரசியலமைப்பு தயாராகும்; நீதி அமைச்சர்

13.09.2021 06:00:00

புதிய அரசியலமைப்பை வரைவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழு, இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு, மேலும் மூன்று மாத கால அவகாசத்தைக் கோரியுள்ளது.

சட்ட வரைஞர் திணைக்களத்தினால் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பின் முதல்நிலை வரைவை ஆய்வு செய்து வருவதாகவும், இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிப்பதற்கு, குழுவின் ஆயுள்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்புச் செய்யுமாறும், அந்தக் குழு கோரியுள்ளது.

இந்தக் கோரிக்கை ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகத்தின், சட்ட விவகாரங்களுக்கான, பணிப்பாளர் ஹரிகுப்த றோகணதீர தெரிவித்துள்ளார்.

இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் டிசெம்பர் மாதம் வரை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று நிலைமைகளாலேயே, இந்த காலநீடிப்பு கோரிக்கை விடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக, குறித்த நிபுணர் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை ஒன்பது பேர் கொண்ட இந்த நிபுணர் குழு புதிய அரசியலமைப்புக்கான வரைவை, வரும் நவம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யும் என்று நம்புவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.