
மனிதாபிமானமற்ற நடவடிக்கை!
அமெரிக்காவின் நாடு கடத்தல் செயலின் போது பிரேசில் நாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் கண்டனம் தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதையடுத்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் அமெரிக்காவிலிருந்து தங்கள் தாயகம் திரும்பும் வழியில் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். |
அமெரிக்க விமானத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரேசிலியர்கள், விமான பயணம் முழுவதும் கைகளில் விலங்குகளுடன் இருக்க வைக்கப்பட்டதாகவும், குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். விமானத்தின் உட்புறம் வெப்பமாக இருந்ததால் சிலர் மயக்க நிலைக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். பிரேசிலியர்கள் மீது நிகழ்ந்த இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கண்டித்துள்ள பிரேசில் வெளியுறவு அமைச்சகம், இது தங்கள் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க அதிகாரிகள், நாடு கடத்தப்பட்டவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட விமானத்தை மெக்சிகோவிற்கு அனுப்ப முயன்ற போது, அந்நாடு தரையிறங்க அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, விமானம் கவுதமாலாவுக்கு திருப்பி விடப்பட்டது. மெக்சிகோவின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான பதில் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். |